ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு
திங்களன்று (மார்ச் 13) இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஐசிசியின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் குடாகேஷ் மோட்டி ஆகியோரம் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இருவரையும் பின்னுக்குத் தள்ளி ஹாரி புரூக் விருதை வென்றுள்ளார். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ப்ரூக் தனது சிறப்பான ஆட்டத்திற்காக மாதத்தின் சிறந்த வீரர் விருதை இரண்டாவது முறையாக வென்றுள்ளார். இதன் மூலம் இரண்டு முறை மாதத்தின் சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தானின் பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்தார்.
மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக ஆஷ்லே கார்ட்னர் தேர்வு
பெண்கள் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை ஆஸ்திரேலியா வெல்வதற்கு சிறப்பாக பங்களித்ததன் மூலம் ஆஷ்லே மாதாந்திர விருதை கைப்பற்றியுள்ளார். விருது குறித்து கூறிய கார்ட்னர், "டி20 உலகக் கோப்பையில் நியூலேண்ட்ஸில் நிரம்பிய கூட்டத்திற்கு முன்பாக நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது நம்பமுடியாத அனுபவம்." எனத் தெரிவித்தார். முன்னதாக, icc-cricket.com இல் பதிவுசெய்யப்பட்ட ஊடக பிரதிநிதிகள், ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமர்ஸ், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நடத்தப்பட்ட உலகளாவிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து கார்ட்னர் மற்றும் புரூக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.