Loading...
10 ஆண்டு கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி: இந்திய மகளிர் அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவ கேப்டன் பதவியிலிருந்தும் ஹர்மன்பிரீத் கவுர் விலகுவதாக அறிவித்துள்ளார்.

10 ஆண்டு கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி: இந்திய மகளிர் அணி கேப்டன் பதவியிலிருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்

எழுதியவர் Vasuki
Oct 06, 2026
11:47 am

செய்தி முன்னோட்டம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பல வரலாற்று வெற்றிகளுக்கு அழைத்துச் சென்று, சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றிய நட்சத்திர வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணியின் தூணாக விளங்கி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது உள்ளிட்ட பல சர்வதேச மைல்கற்களை எட்டிய அவர், தனது கேப்டன் பொறுப்பை நிறைவு செய்வதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். இச்செய்தி சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்திலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உருக்கம்

கடினமான முடிவுகளும் அணிக்கான வளர்ச்சியும்

தனது விலகல் குறித்து மனம்திறந்து பதிவிட்டுள்ள ஹர்மன்பிரீத் கவுர், "அனைத்து வடிவ இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து இன்று நான் விடைபெறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இது எளிதான முடிவல்ல என்றும், வாழ்நாள் நினைவுகளும் தியாகங்களும் நிறைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்காகத் தனது ரத்தம், வியர்வை, நேரம் அனைத்தையும் அர்ப்பணித்ததாகவும், அணியின் வளர்ச்சிக்காகப் பல தனிப்பட்ட விருப்பங்களைத் தியாகம் செய்ததாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இளம் வீராங்கனைகளின் முன்னேற்றத்திற்காகவும் அணியின் நலனுக்காகவுமே சவாலான முடிவுகளை எடுத்ததாகக் கூறியுள்ள அவர், ஏமாற்றங்கள் மற்றும் விமர்சனங்களைக் கடந்து பெருமைமிக்க பல வெற்றிகளையும் கொண்டாட்டங்களையும் அனுபவித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

நன்றி

"அமைதியுடன் விடைபெறுகிறேன்"

"அணி தற்போது சிறந்த திறமை, அசைக்க முடியாத தன்னம்பிக்கை மற்றும் பிரகாசமான எதிர்காலத்துடன் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன்".

"ஒரு கேப்டனாக என் கடமையை நான் முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக உணர்கிறேன். கேப்டன் பதவி வேண்டுமானால் இன்று முடிவுக்கு வரலாம்.ஆனால் இந்திய கிரிக்கெட் மீதான எனது காதல் எப்போதும் குறையாது. கேப்டன்சி முடிந்துவிட்டது".

வீராங்கனையாக எனது கிரிக்கெட் பயணம் தொடரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர், தனது பயணத்தில் துணைநின்ற சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பிசிசிஐ மற்றும் ரசிகர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT