டி20 கிரிக்கெட்டில் பும்ரா,அஸ்வினின் சாதனையை முறியடித்தார் ஹர்திக் பாண்டியா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஏற்கனவே முதல் போட்டியிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக தொடர்ந்து 2 டி20 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த தோல்விக்கு மத்தியில், ஹர்திக் பாண்டியா டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார். ஹர்திக் இதுவரை 241 டி20 போட்டிகளில் விளையாடி 139.39 ஸ்டிரைக் ரேட்டில் 4,391 ரன்களை எடுத்துள்ளார். இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் மொத்தமாக 152 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது அதிக விக்கெட் எடுத்த இந்தியர் ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா 2013இல் ஐபிஎல்லில் தனது முதல் டி20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானாலும், 2016இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக முதல் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார். சர்வதேச டி20இல் பாண்டியா இதுவரை 89 போட்டிகளில் 1,314 ரன்கள் குவித்துள்ளார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளுடன் மொத்தம் 73 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் ஜஸ்ப்ரீத் பும்ரா (70) மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் (72) ஆகியோரை விஞ்சி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் (95) மற்றும் புவனேஷ்வர் குமார் (90) முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.