ஐபிஎல் 2023 : மெதுவாக பந்துவீசியதற்காக ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐபிஎல் 2023 தொடரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மெதுவான ஓவர் ரேட்டைப் பராமரித்ததற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளை மூன்று மணி நேரம் மற்றும் 20 நிமிடங்களில் முடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் ஸ்லோ ஓவர் ரேட் பல ஆட்டங்களில் ஒரு சிக்கலாக உள்ளது. "குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின்படி இந்த சீசனில் அவரது அணி செய்த முதல் குற்றமாக இது இருந்ததால், பாண்டியாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது" என்று ஐபிஎல் நிர்வாகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மெதுவாக பந்து வீசியதற்காக இதுவரை அபராதம் விதிக்கப்பட்டவர்களின் விபரம்
ஐபிஎல் 2023இல் முதல் முறையாக ஆர்சிபி அணியின் பாப் டு பிளெசிஸிற்கும், அடுத்து ஆர்ஆர் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்து வீசினால் முதல் முறையாக கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும் நிலையில், இரண்டாவது முறை கேப்டனுக்கு ரூ.24 லட்சமும், வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை முதல் கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்படுவதோடு, அணியில் உள்ள வீரர்களுக்கு ரூ.12 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.