ஐபிஎல் 2026: கடைசி பந்து வரை திக் திக்! டெல்லியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 சீசனின் 14வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, கேப்டன் கேஎல் ராகுலின் அதிரடி ஆட்டத்தையும் மீறி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ரன் வேட்டை
குஜராத் அணியின் ரன் வேட்டை: பட்லர் மற்றும் சுந்தரின் அதிரடி
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் வெறும் 27 பந்துகளில் 52 ரன்கள் விளாசி (3 பவுண்டரி, 5 சிக்ஸர்) அதிரடித் தொடக்கத்தை அளித்தார். இந்தப் போட்டியின் மூலம் பட்லர் டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களைக் கடந்த 5வது வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். அவருக்குத் துணையாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்தார். 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த சுந்தர், கேப்டன் ஷுப்மன் கில்லுடன் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தார். டெல்லி தரப்பில் லுங்கி என்கிடி மட்டுமே 4 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்துச் சிறப்பாகப் பந்துவீசினார்.
ஷுப்மன் கில் மீட்சி
கேப்டன் ஷுப்மன் கில்லின் அதிரடி மீட்சி
கழுத்துத் தசைப் பிடிப்பு காரணமாகக் கடந்த போட்டியில் விளையாடாத குஜராத் கேப்டன் ஷுப்மன் கில், இந்தப் போட்டியில் மாஸாகத் திரும்பினார். 45 பந்துகளில் 70 ரன்கள் (4 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்து அணியின் ஸ்கோர் 200ஐத் தாண்ட உதவினார். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2,500 ஐபிஎல் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 5,500 ரன்கள் என்ற மைல்கல்லையும் அவர் எட்டினார்.
டெல்லியின் போராட்டம்
டெல்லியின் போராட்டமும் கடைசி நேரப் பரபரப்பும்
211 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்குக் கேப்டன் கேஎல் ராகுல் தூணாக நின்றார். 52 பந்துகளில் 92 ரன்கள் (11 பவுண்டரி, 4 சிக்ஸர்) எடுத்த அவர், டி20 கிரிக்கெட்டில் 700 பவுண்டரிகளைக் கடந்து சாதனை படைத்தார். அவருக்கு ஆதரவாகப் பதும் நிசங்கா 41 ரன்களும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டபோது, பிரசித் கிருஷ்ணா சிறப்பாகப் பந்துவீசி விப்ராஜ் நிகாம் விக்கெட்டை எடுத்தார். கடைசி இரண்டு பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டாட் பந்துகளை வீசி குஜராத் அணிக்கு ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றுத் தந்தார் பிரசித் கிருஷ்ணா.