ஹாக்கி உலகக்கோப்பையில் படுதோல்வி! இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா!
இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கிரஹாம் ரீட், ஹாக்கி உலகக் கோப்பை முடிவடைந்த ஒரு நாளில் திங்கட்கிழமை (ஜனவரி 30) தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்நாட்டில் நடந்த ஹாக்கி உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ரீட்டை தொடர்ந்து அணியின் இதர ஊழியர்களான கிரெக் கிளார்க் மற்றும் அறிவியல் ஆலோசகர் மிட்செல் டேவிட் பெம்பர்டன் ஆகியோரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கியிடம் ஒப்படைத்தனர். உலகக் கோப்பையில் அணிக்கு என்ன தவறு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்வதற்காக டிர்கி மற்றும் பொதுச்செயலாளர் போலாநாத் சிங், வீரர்கள் மற்றும் உதவி ஊழியர்களை சந்தித்த பின்னர் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கிரஹாம் ரீட்
கிரஹாம் ரீட் 2019 இல் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார் மற்றும் எஃப்ஐஎச் தொடர் இறுதிப் பட்டத்தை வென்றதன் மூலம், டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதியை உறுதி செய்தார். ரீட்டின் வழிகாட்டுதலில் மன்பிரீத் சிங்கின் தலைமையின் கீழ், இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது .இது நாட்டில் மீண்டும் ஹாக்கியின் மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தது. ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய அணி பதக்கம் வெல்ல உதவியதால் 2021 ஆம் ஆண்டி ரீட்டின் புகழ் உச்சம் தொட்டது. ஒலிம்பிக்கில், மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஒன்றரை வருடங்களில், உலகக்கோப்பையில் இந்திய அணி படுதோல்வியடைந்ததால், தற்போது விலகும் முடிவை எடுத்துவிட்டார்.