தூய்மை பணியாளர் To கிரிக்கெட் வீரர் : ரிங்கு சிங்கின் வியக்க வைக்கும் பின்னணி
ஐபிஎல் 2023 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) இடையேயான போட்டியில் ரிங்கு சிங் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது பேட்டிங் செய்த கொல்கத்தா கேகேஆர் அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜிடி அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. உமேஷ் யாதவ் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த பிறகு, ஐபிஎல் போட்டியின் வரலாற்றில், தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்களை அடித்து ரிங்கு சிங் ஐபிஎல் வரலாற்றில் அசாத்திய சாதனையை செய்து வரலாறு படைத்தார்.
ரிங்கு சிங்கின் வியக்க வைக்கும் பின்னணி
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரிங்கு, சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர், அவரது தந்தை எல்பிஜி சிலிண்டர்களை விநியோகம் செய்தவர் ஆவார். அவரது மூத்த சகோதரர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார். ரிங்கு கிரிக்கெட்டில் பெரிய இடத்தைப் பெறும் முன்பு, சுற்றியுள்ள பலரின் வற்புறுத்தலின் பேரில், தூய்மை பணியாளராகவும் இருந்துள்ளார். ஆனால் அவரது விருப்பம் முழுவதும் கிரிக்கெட்டை சுற்றியே இருந்த நிலையில், அந்த வேலையை உதறிவிட்டு, முழு மூச்சாக கிரிக்கெட்டில் உழைத்து தற்போது ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளார். ரிங்கு உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டில் 59.89 சராசரியுடன் 40 போட்டிகளில் 2,875 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 50 போட்டிகளில் 53.03 என்ற சராசரியுடன் 1,749 ரன்கள் எடுத்துள்ளார். 2018 முதல் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார்.