91 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; இப்படியொரு சாதனையா!
கிரேட்டர் நொய்டாவில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இன்று (செப்டம்பர் 13) வரை ஆப்கான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே திட்டமிடப்பட்ட ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. போட்டி கடைசி நாளை எட்டியுள்ள நிலையில், மோசமான வசதிகள் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமலேயே போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய மண்ணில் ஒரு பந்து கூட வீசப்படாமல் டெஸ்ட் போட்டி கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்தியா முதல் முறையாக 1933ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியை நடத்த தொடங்கிய நிலையில், இதுவரை இப்படியொரு சூழல் ஏற்பட்டதில்லை.
ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டிகள்
நியூசிலாந்து மற்றும் ஆப்கான் கிரிக்கெட் அணிகள் இடையேயான இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதன் மூலம், 91 ஆண்டுகளில் இந்திய மண்ணில் ஒரு பந்துகூட வீசப்படாமல் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்ட முதல் போட்டி சாதனை படைத்துள்ளது. ஆசியாவில் இதற்கு முன் ஒரு போட்டி மட்டும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. 1998ஆம் ஆண்டு பைசலாபாத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இது நடந்தது. ஒட்டுமொத்தமாக, உலகம் முழுவதும் ஒரு பந்து கூட வீசப்படாமல் தற்போதைய போட்டியுடன் சேர்த்து எட்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கைவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நியூசிலாந்து அணி இந்த போட்டிக்குப் பிறகு இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.