ஆஸ்திரேலியாவில் 20 ஆண்டுகளில் முதல்முறை; யஷஸ்வி ஜெய்ஸ்வால்-கே.எல்.ராகுல் ஜோடி சாதனை
பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி உறுதியான கட்டுப்பாட்டை எடுத்து, 2வது நாள் முடிவில் 172/0 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 218 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஜோடியான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்களும், கே.எல்.ராகுல் 152 பந்துகளில் 62 ரன்களும் எடுத்து 172 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் சரித்திரம் படைத்தனர். இது 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்திய தொடக்க ஜோடியின் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை கடப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் தொடக்க ஜோடி பார்ட்னர்ஷிப்
கடைசியாக வீரேந்திர சேவாக் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஜோடி 2004 தொடரின் போது, சிட்னியில் 123 ரன்கள் எடுத்தது. இதை தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப் முறியடித்தது. கூடுதலாக, 2010க்குப் பிறகு ஆஸ்திரேலியாவிற்கு சென்ற எந்த அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 150க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்காமல் இருந்த நிலையில், அதையும் இந்த ஜோடி முறியடித்துள்ளது. பெர்த் டெஸ்டில் முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு சுருண்டது.