சர்வதேச ஹாக்கி தரவரிசையில் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா
செய்தி முன்னோட்டம்
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எஃப்ஐஎச்) திங்களன்று (செப்.18) வெளியிட்ட சமீபத்திய உலக தரவரிசையில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மே 2022இல் டாப் 3இல் இருந்து வெளியேறிய பிறகு தற்போது 2771 புள்ளிகளுடன் மீண்டும் முதல் 3 இடங்களுக்குள் வந்து தனது வலிமையை நிலைநாட்டியுள்ளது.
கடந்த மாதம் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இல் இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் இது சாத்தியாகியுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி 7 ஆட்டங்களில் ஆறில் வெற்றியும், ஒன்றில் டிராவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மகளிர் ஹாக்கியில், இந்திய அணி தொடர்ந்து ஏழாவது இடத்தில் நீடிக்கிறது.
netherlands tops in fih rankings
முதலிடத்தில் நெதர்லாந்து ஹாக்கி அணி
நெதர்லாந்து (3113) யூரோ ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தங்கள் எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் பட்டத்தையும், 2023ல் நடந்த எஃப்ஐஎச் ஹாக்கி உலகக் கோப்பையில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றதன் மூலம் தரவரிசையில் முதலிடத்தில் தனது ஆதிக்கத்தை நீட்டித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள பெல்ஜியத்துடன் (2989) ஒப்பிடும்போது நெதர்லாந்து பெற்றுள்ள புள்ளிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் இப்போதைக்கு நெதர்லாந்தை முதலிடத்திலிருந்து எந்த அணியாலும் அசைக்க முடியாத நிலை நிலவுகிறது.
இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், ஒரு இடம் பின்தங்கிய இங்கிலாந்து நான்காவது இடத்தில் உள்ளது.
மகளிர் ஹாக்கியிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் நெதர்லாந்து, அதிலும் தரவரிசையில் முதலிடத்தை தன்வசம் வைத்துள்ளது.