வீராங்கனைக்கு முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் சஸ்பெண்ட்
பிபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை அவரது அனுமதி இல்லாமல் பொதுமேடையில் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்டது சர்ச்சையானது. இந்நிலையில், லூயிஸ் ரூபியேல்ஸின் இந்த செயலால் அதிருப்தியடைந்த சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு, 90 நாட்களுக்கு கால்பந்து தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் அவரை இடைநீக்கம் செய்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) இந்த உத்தரவை வெளியிட்டதோடு, உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்த விசாரணையையும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) தொடங்கி நடந்து வருகிறது.
சம்பவம் குறித்து வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவின் கருத்து
லூயிஸ் ரூபியேல்ஸ் மீது கடந்த ஒருவாரமாகவே பலரும் குற்றம் சாட்டி வந்தாலும், முத்தம் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்ததாக கூறி, வெள்ளியன்று பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். எனினும், ஹெர்மோசோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ரூபியேல்ஸ் கருத்தை முற்றிலுமாக மறுத்து, தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாலியல் அத்துமீறல் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், முத்தம் கொடுக்க தான் எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சனிக்கிழமை கூடி விவாதித்த பிறகு, பிபா ஒழுங்குமுறை விதி 51வது பிரிவின் கீழ் இடைநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர் 90 நாட்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான அனைத்து கால்பந்து நிகழ்வுகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.