டெல்லியில் மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் : பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி விலகிய சர்வதேச வீராங்கனைகள்
புதுடெல்லியில் சனிக்கிழமை (மார்ச் 25) தொடங்கிய சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு சார்பில் தொடங்கிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் இருந்து கஜகஸ்தானின் ஜன்சயா அப்துல்மாலிக் மற்றும் ஜெர்மனின் எலிசபத் ஆகியோர் விலகியுள்ளனர். தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட வசதிகள் படுமோசமாக உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கஜகஸ்தானின் ஜன்சயா அப்துல்மாலிக் போட்டியில் பங்கேற்க டெல்லி வந்தபோது விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை என்றும், தங்களை தங்கவைக்கும் ஹோட்டலுக்கு சென்றபோது அங்கு அறை இல்லை என்று அலைக்கழிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தான் இந்தியாவை மிகவும் நேசிப்பதாவும், கடந்த ஆண்டு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் மிகச் சிறப்பாக நடத்தப்பட்ட நிலையில், டெல்லியில் இப்படியொரு மோசமான நடத்தையை எதிர்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மன்னிப்பு கோரிய சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு
நடந்த தவறுகளுக்காக சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு வீராங்கனைகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. எனினும் போட்டியை ஒத்திவைக்க முடியாது என்றும் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என அறிவித்துள்ளது. மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் என்பது நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முதல் இரண்டு கட்டங்கள் கஜகஸ்தான் மற்றும் ஜெர்மனியில் நடந்து முடிந்துள்ளன. மூன்றாவது கட்டம் தற்போது டெல்லியில் நடைபெறும் நிலையில் இதில் 12 வீராங்கனைகள் பங்கு பெற்றனர். அதில் தற்போது இரண்டு வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், 10 வீராங்கனைகளுடன் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இதில் 3 இந்திய வீராங்கனைகள் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.