கிரிக்கெட்ட விட்டே போயிடலாம்னு நினைச்சேன்! மனம் திறந்த இளம் வீரர் ஷாஹீன் அப்ரிடி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் ஷாஹீன் அப்ரிடி, காயம் காரணமாக, 2022 ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறினார். பின்னர், 2022 டி20 உலகக் கோப்பையில் அவர் மீண்டும் திரும்பினார். ஆனால், அங்கு முழங்காலில் மற்றொரு காயம் ஏற்பட்டு பல மாதங்கள் அறுவை சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்குப் பிறகு, பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் வரவிருக்கும் சீசனில் மீண்டும் களத்திற்குத் திரும்ப உள்ளார். தொடக்க ஆட்டத்தில் முல்தான் சுல்தான்களுக்கு எதிராக ஷாஹீன் லாகூர் கிலாந்தர்ஸ் அணியை வழிநடத்துகிறார். இருப்பினும், நேர்காணல் ஒன்றில் தனது மறுவாழ்வு குறித்து பேசிய ஷாஹீன், கிரிக்கெட்டில் இருந்து வெளியேற முடிவு செய்ததாகவும், அப்போது தனது பழைய வீடியோக்களைப் பார்த்து ஊக்கம் பெற்று மீண்டும் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஷாஹீன் அப்ரிடியின் அசாத்திய செயல்திறன்
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய இளம் வீரர்களில் ஷாஹீன் அப்ரிடி ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. 2018 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான 22 வயதான அவர், 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஷாஹீன் 32 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது தவிர 47 டி20 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். விரைவில் தொடங்க உள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் கிலாந்தர்ஸ் அணியை ஷாஹீன் கேப்டனாக வழிநடத்துகிறார். இதற்கிடையே, ஷாஹீன் அப்ரிடிக்கும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரியிடியின் மகளுக்கும் இன்று திருமணம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.