தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விகள்! தத்தளிக்கும் உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை சாம்பியனான இங்கிலாந்து, தொடர்ந்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்து, 50 ஓவர் வடிவத்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, இங்கிலாந்து 50 ஓவர்களில் 342/7 என்ற வலுவான நிலையில் இருந்த போதிலும், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தென்னாப்பிரிக்கா 49.1 ஓவர்களில் வெற்றி இலக்கை துரத்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. இதற்கு முன், நவம்பர் 2022 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா vs இங்கிலாந்து : 2வது ஒருநாள் போட்டி ஹைலைட்ஸ்
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதல் பந்து வீசியது. இங்கிலாந்து முதல் ஏழு ஓவர்களுக்குள் ஜேசன் ராய் மற்றும் டேவிட் மலனை இழந்து தடுமாறியது. எனினும் ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் மற்றும் மொயீன் அலி ஆகியோரின் அசத்தலான அரைசதங்கள் மூலம் இங்கிலாந்து மீண்டது. இதன் மூலம் இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டெம்பா பவுமாவின் சதம் வலுவான அடித்தளத்தை கொடுத்தது. அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் நின்று ஆட, 49.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.