மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை!
மகளிர் ஐபிஎல் தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனைகளை, அதிக காலம் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்தார். திங்கட்கிழமை (பிப்ரவரி 13) மகளிர் ஐபிஎல் ஏலத்தில் பல வீராங்கனைகளும், கோடிக்கணக்கான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில், சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், கடந்த காலங்களில், இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தங்களுக்கு இல்லை என்று கருதி, பலர் விரைவிலேயே கிரிக்கெட்டை விட்டு வெளியேறிய நிலை இனி மாறும் என்றார். மொத்தத்தில், பெண் வீராங்கனைகள் விளையாட்டைப் பார்க்கும் விதத்தை இந்த மகளிர் ஐபிஎல் மாற்றும் என்று மிதாலி மேலும் கூறினார்.
வீராங்கனைகளுக்கு பணத்தை வாரியிறைக்கும் மகளிர் ஐபிஎல்
இந்திய தேசிய அணியின் பெண் வீராங்கனைகளுக்கான ஊதியத்தை, ஆண்களுக்கு நிகராக பிசிசிஐ சமீபத்தில் நியமனம் செய்தது. இருப்பினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் அந்த அளவுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குறை உள்ள நிலையில், அதை மகளிர் ஐபிஎல் மாற்றும். சராசரியாக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் ஒரு மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஒரு நாள் ஆட்டத்திற்கு ரூ.20,000 பெறுகிறார். விளையாடாத வீரர்கள் ஒரு நாளைக்கு ரூ.10,000 சம்பாதிக்கிறார்கள். பெண்களுக்கான டி20 போட்டிக்கு ரூ.10,000 ரூபாய் மற்றும் விளையாடாத வீரர்களுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் சராசரியாக, ஒரு வீராங்கனை ஆண்டுக்கு சுமார் ரூ.2.4 லட்சம் சம்பாதிக்கிறார். ஆனால் மகளிர் ஐபிஎல் ஏலத்தில், குறைந்தபட்ச அன்கேப்டு வீராங்கனைக்கே ரூ.10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது வீராங்கனைகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.