ஃபிஃபா உலகக்கோப்பை 2026: ஈரான் வீரர்கள் வராமல் இருப்பதே நல்லது; டொனால்ட் டிரம்ப் தடாலடி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஈரான் வீரர்கள் போட்டியில் பங்கேற்க அமெரிக்காவிற்கு வரலாம் என்று கூறினாலும், அவர்களது பாதுகாப்பைக் கருதி அவர்கள் வராமல் இருப்பதே நல்லது என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சமூக வலைதள பதிவு
டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவு
அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், "ஈரான் தேசிய கால்பந்து அணி உலகக்கோப்பைக்கு வருவதற்குத் தடை ஏதுமில்லை. ஆனால், அவர்களது சொந்த வாழ்க்கை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்கள் இங்கு இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்பவில்லை." என்று பதிவிட்டுள்ளார். ஃபிபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ முன்னதாக ட்ரம்ப்பைச் சந்தித்தபோது, ஈரான் அணிக்கு அமெரிக்காவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்ததாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போது டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாய்ப்பு
ஈரான் விலகினால் யாருக்கு வாய்ப்பு?
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் ஈரான் அணி உலகக்கோப்பையிலிருந்து விலகத் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. அவ்வாறு ஈரான் அதிகாரப்பூர்வமாக விலகினால், அவர்களுக்குப் பதிலாகப் பின்வரும் அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்:- ஈராக்: ஆசிய கால்பந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தகுதி பெறாத அணியான ஈராக், ஈரானுக்குப் பதிலாகப் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளது. மார்ச் 31 இல் நடைபெறும் பிளே-ஆஃப் போட்டிகளின் முடிவில் இது தெளிவாகும். ஐக்கிய அரபு அமீரகம்: ஈராக் பிளே-ஆஃப் போட்டிகளின் மூலம் நேரடியாக தகுதி பெற்றுவிட்டால், அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
சூழல்
தற்போதைய சூழல்
ஈரான் அணி உலகக்கோப்பையில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் விளையாட அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், போரினால் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் அமெரிக்க அதிபரின் இந்த எச்சரிக்கை காரணமாக, ஈரான் வீரர்களின் மனநிலை மற்றும் அவர்களின் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளது.