நிதானமாக ஓடினால் அவுட் தான் ஆவீர்கள் : ஹர்மன்ப்ரீத் கவுரை விளாசிய முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி
தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அணி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இமாலய இலக்காக இருந்தாலும், ஒருகட்டத்தில் இந்திய அணி வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுரின் ரன் அவுட் போட்டியின் திருப்புமுனையாக மாறியது. இந்நிலையில் ஹர்மன்ப்ரீத் ரன் அவுட் ஆன விதம் குறித்து முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் டயானா எடுல்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். பலர் ஹர்மன்ப்ரீத்தின் அவுட் துரதிர்ஷ்டவசமாமானது எனக் கூறினாலும், எடுல்ஜி ஹர்மன்பிரீத்தின் அணுகுமுறை தவறானது எனக் கூறியுள்ளார்.
டயானா எடுல்ஜி கூறியதன் முழு விபரம்
எடுல்ஜி பிடிஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது பின்வருமாறு :- அவர் பேட் சிக்கிக்கொண்டதாக நினைக்கிறார். ஆனால் இரண்டாவது ரன் எடுப்பதை பார்த்தால் அவர் ஜாகிங் செய்தார். உங்கள் விக்கெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்போது, நீங்கள் ஏன் நிதானமாக ஓடுகிறீர்கள்? நீங்கள் வெல்ல தொழில்முறை கிரிக்கெட்டை விளையாட வேண்டும். அந்த இரண்டு ரன்களையும் காப்பாற்ற எலிஸ் பெர்ரி அடித்த டைவ்வை பாருங்கள். அதுதான் தொழில்முறை விளையாட்டு. இவ்வாறு அவர் கூறினார். இது தவிர ஷெபாலி வர்மாவும் தொடர்ந்து மோசமான ஷாட்களை தேர்வு செய்து அடிக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளதோடு, ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இடையே கூட ஒற்றுமையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.