
INDvsWI முதல் டெஸ்ட்: முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவத்திற்கு அர்ப்பணித்த துருவ் ஜூரேல்
செய்தி முன்னோட்டம்
இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரேல், அகமதாபாத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளில் அடித்த தனது முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவம் மற்றும் கார்கில் போர் வீரரான தனது தந்தைக்கு அர்ப்பணித்தார். அபாரமான ஃபார்மில் இருந்த துருவ் ஜூரேல், 125 ரன்கள் குவித்து, இந்திய அணியை ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த உதவினார். ரவீந்திர ஜடேஜாவுடன் (104 நாட் அவுட்) இணைந்து, முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்த 22 வயதான துருவ் ஜூரேல், இந்தியாவை இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட வைத்தார். இதன் மூலம், இந்தியா 286 ரன்கள் முன்னிலையைப் பெற்றது.
ராணுவ சல்யூட்
அரைசதம் எடுத்தபோது ராணுவ சல்யூட்
முன்னதாக, ஐம்பது ரன்களை எட்டியபோது ராணுவ சல்யூட் செய்த துருவ் ஜூரேல், சதம் அடித்த பிறகும் அதையே மீண்டும் செய்து தனது மரியாதையை வெளிப்படுத்தினார். ஆட்டத்திற்குப் பின் பேசிய துருவ் ஜூரேல், ஆயுதப் படைகளின் ஈடு இணையற்ற சேவையை வலியுறுத்தினார். "நாங்கள் மைதானத்தில் செய்வதையும், அவர்கள் போர்க்களத்தில் செய்வதையும் ஒப்பிட முடியாது. நான் எப்போதும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவேன், எதிர்காலத்தில் நான் செய்யும் அனைத்தும் அவர்களுக்காகவே இருக்கும்." என்று கூறி தனது ஆழமான மரியாதையை துருவ் ஜூரேல் வெளிப்படுத்தினார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.