பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25: தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு; பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியின் தொடக்க டெஸ்டுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இளம் பேட்டர் தேவ்தத் படிக்கலை சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. அணியின் வழக்கமான கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஷுப்மன் கில் முதல் போட்டியில் விளையாடாத நிலையில், 24 வயதான இளம் வீரர் தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, பயிற்சி விளையாட்டின் போது ஷுப்மன் கில்லின் கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேவ்தத் படிக்கல், தனது இந்தியா ஏ போட்டிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் தங்கவைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக அரைசதம்
தேவ்தத் படிக்கல் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் ஆட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அரை சதத்துடன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து அவர் அணியில் சேர்க்கப்பட்டாலும், அபிமன்யு ஈஸ்வரனுக்கே டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல்.