'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன?
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனியின் முன்னாள் வர்த்தக கூட்டாளிகள், அவருக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் அவர்கள் நிரந்தர தடை மற்றும் நஷ்டஈடு கோருகின்றனர். இந்த மனு, நீதிபதி பிரதீபா எம் சிங் முன், நேற்று, ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. முன்னதாக, தோனி, தனது பிசினஸ் பார்ட்னர்கள் தன்னிடம் ரூ.15-16 கோடி ஏமாற்றியதாக அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுத்திருந்தார். ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் இரண்டு அதிகாரிகள் மீது, தோனி, ராஞ்சியில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். 2017இல் போடப்பட்ட கிரிக்கெட் அகாடமியின் ஒப்பந்தத்தின் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அந்த நிறுவனத்தினை சேர்ந்த மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா விஸ்வாஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தோனியின் புகார் கூறுவது என்ன?
உலகளவில் கிரிக்கெட் அகாடமியை நடத்துவதற்காக 2017 ஆம் ஆண்டில் தோனியுடன் திவாகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அறிக்கைகளின்படி, ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஒரு உரிமைக் கட்டணத்தைச் செலுத்தவும், ஒப்பந்தத்தின்படி லாபத்தைப் பகிர்ந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், அவை மதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை தோனி சார்பாக நினைவூட்டப்பட்ட போதிலும், ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 15, 2021 அன்று ஆர்கா ஸ்போர்ட்ஸுக்கு வழங்கப்பட்ட அதிகாரக் கடிதத்தை தோனி திரும்பப் பெற கூறியுள்ளார். சட்டரீதியாக தோனி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை.
திவாகரும், அவரது மனைவி சௌமியாவும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர்
திவாகரும், அவரது மனைவி சௌமியா தாஸும், தற்போது தோனிக்கு எதிராக நிரந்தர தடை மற்றும் நஷ்டஈடு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். பிடிஐபடி , திவாகரும், சௌமியாவும், தோனி மற்றும் அவர் சார்பாக செயல்படுபவர்கள் அவதூறான எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் கூறக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தீங்கிழைக்கும், அவதூறான அல்லது பொய்யான அறிக்கைகளை உருவாக்குவதிலிருந்தும், பரப்புவதிலிருந்தும் அல்லது வெளியிடுவதிலிருந்தும் அவர்களைத் தடுக்குமாறு அவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டனர். கூடுதலாக தங்கள் மீது அவதூறு பரப்பியதற்காக நஷ்ட ஈடும் கேட்டுள்ளனர்.