ஐபிஎல் 2023 : டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ
ஐபிஎல் 2023 தொடரின் 34வது ஆட்டத்தில் திங்கள்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணி மெதுவாக பந்துவீசியதற்காக அதன் கேப்டன் டேவிட் வார்னர் பிசிசிஐ நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சொந்த மைதானமான ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டிசி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் எஸ்ஆர்எச் அணியை வீழ்த்தியது. இருப்பினும், டிசி கேப்டன் டேவிட் வார்னருக்கு மெதுவாக பந்து வீசியதற்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெதுவாக பந்துவீசுவதில் இது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முதல் குற்றம் என்பதால், கேப்டனுக்கு மட்டும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்துவீசுவது குறித்த ஐபிஎல் விதிகள்
ஐபிஎல் போட்டிகள் பொதுவாக மூன்று மணி நேரம் 20 நிமிடங்களில் முடிவடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் மெதுவாக பந்து வீசுவது மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. பல ஆட்டங்கள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கின்றன. ஒரு பந்துவீச்சு அணி 90 நிமிட நேரத்திற்குள் 20 ஓவர்களை முடிக்க முடியவில்லை என்றால், அவர்கள் இந்த விதியை மீறிவிட்டார்கள் என்று அர்த்தம். இந்த 90 நிமிடங்களில் 85 நிமிடங்கள் விளையாடும் நேரம் மற்றும் ஐந்து நிமிடம் இடைவெளிக்கானது. இருப்பினும், டிஆர்எஸ் மற்றும் காயங்களின் நேரங்கள் சேர்க்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.