கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன்!
ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் டேனியல் கிறிஸ்டியன் புதன்கிழமை (பிப்ரவரி 3) தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். பிக் பாஷ் லீக் (பிபிஎல்) 2022-23 தொடரில் பிரிஸ்பேன் ஹீட்டிற்கு எதிராக சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக அவர் தனது கடைசி போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. சிட்னி சிக்சர்ஸ் பிளேஆஃப்களை எட்டிய போதிலும், கிறிஸ்டியன் பேட்டிங்கிலோ அல்லது பந்துவீச்சிலோ சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை. இந்த சீசனில் 16 போட்டிகளில், கிறிஸ்டியன் 89 ரன்களை மட்டுமே எடுத்தார். மேலும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். கடைசி போட்டியில் அவர் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
டேனியல் கிறிஸ்டியனின் கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
பிபிஎல் 2018-19 மற்றும் 2020-21இல் முறையே மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பட்டங்களை வெல்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆப்டாவின் கூற்றுப்படி, பிபிஎல் வரலாற்றில் 2,000க்கும் அதிகமான ரன்கள் (2,098) மற்றும் 90க்கும் அதிகமான விக்கெட்டுகளை (93) எடுத்த ஒரே வீரர் கிறிஸ்டியன் மட்டுமே. கிறிஸ்டியன் ஆஸ்திரேலியாவுக்காக 20 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் பங்கேற்றார். டி20 போட்டிகளில் 118 ரன்கள் குவித்ததோடு, 13 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆகஸ்ட் 2021இல் வங்கதேசத்துக்கு எதிரான டி20 அவரது கடைசி சர்வதேச போட்டியாக இருந்தது. ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, கிறிஸ்டியன் 273 ரன்கள் மற்றும் 20 விக்கெட்களை எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் எடுத்த ஆறு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் கிறிஸ்டியனும் ஒருவர் ஆவார்.