ஐபிஎல் 2025: ரிஷப் பண்ட் வந்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சிஇஓ காசி விஸ்வநாதன், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்டை வாங்கும் முடிவில் உள்ளதாக வெளியாகி வரும் வதந்திகளைப் பற்றி பேசினார். சிஎஸ்கே அவரை வாங்க ஆர்வம் காட்டினாலும், தங்களது பர்ஸில் உள்ள தொகையை வைத்து அதிக போட்டி நிறைந்த ஏலத்தில் பண்டை வாங்குவது சவாலானது என்று விஸ்வநாதன் ஒப்புக்கொண்டார். டெல்லி கேப்பிட்டல்ஸில் இருந்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டி, பண்டின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் அவரது சமூக ஊடக இடுகைக்குப் பிறகு எழுந்தன. டெல்லி கேப்பிட்டல்ஸ் தக்கவைப்பு பட்டியலில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்ட பிறகு இந்த வதந்திகள் வலுப்பெற்றன.
சிறந்த வீரர்களை தக்கவைக்க முன்னுரிமை
சிஎஸ்கே புதிய திறமைகளுக்கு திறந்திருந்தாலும், முதன்மை கவனம் முக்கிய வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் உள்ளது என்று விஸ்வநாதன் வலியுறுத்தினார். ப்ரோவோக் டிவியில் முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடுவுடன் நடந்த உரையாடலில், ஐபிஎல் 2024க்கான சிஎஸ்கேயின் தக்கவைப்பு உத்தியை விஸ்வநாதன் கோடிட்டுக் காட்டினார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், எம்எஸ் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகியோருடன் கலந்துரையாடிதாகவும், அதன் பின்னரே கெய்க்வாட், தோனி, ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் மதீஷா பத்திரனா போன்ற அணியின் வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய வீரர்களை தக்கவைக்கும் முடிவை எடுத்ததாகவும் கூறினார். மேலும், அணியில் ரிஷப் பண்ட் உள்ளிட்ட யார் சேர்க்கப்பட்டாலும், எம்எஸ் தோனியின் வளர்ப்பான ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக செயல்படுவார் என்பதையும் விஸ்வநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.