ஐபிஎல் 2026: மும்பை இந்தியன்ஸை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
செய்தி முன்னோட்டம்
சேப்பாக்கம் மைதானத்தில் மஞ்சள் கடல் அலையெனத் திரண்டிருந்த ரசிகர்களுக்கு மத்தியில், ஐபிஎல் 2026 தொடரின் 44வது போட்டியில் மும்பை இந்தியன்ஸை (எம்ஐ) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) துவம்சம் செய்துள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் அனுபவ ஆட்டமும், இளம் ரத்தம் கார்த்திக் சர்மாவின் அதிரடியும் இணைந்து, மும்பையின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
நிதானமான ஆட்டம்
நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ்
மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் சீராக இருந்தது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் இரண்டு பவுண்டரிகளை விளாசிய நிலையில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய உர்வில் படேல் 12 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இவர்களது விக்கெட்டுகளுக்குப் பிறகு இணைந்த ருதுராஜ் மற்றும் கார்த்திக் ஜோடி, மும்பை பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்து போட்டியை 18வது ஓவரிலேயே முடிவுக்குக் கொண்டு வந்தது.
டி20 கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் என்ற மைல்கல்
இந்தப் போட்டியின் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் தனது டி20 வாழ்க்கையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில் அவர் விளாசிய இரண்டாவது சிக்ஸரின் மூலம் 200 டி20 சிக்ஸர்கள் என்ற சாதனையை அவர் படைத்தார். 160 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ள ருதுராஜ், டி20 போட்டிகளில் 500 பவுண்டரிகளையும் கடந்துள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 5,247 ரன்களைச் சேர்த்துள்ள அவருக்கு இது 37வது அரைசதமாகும்.
ருதுராஜ் கெய்க்வாட் ஆதிக்கம்
மும்பைக்கு எதிரான ருதுராஜின் ஆதிக்கம்
ஐபிஎல் அரங்கில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார். 80 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இதுவரை 2,747 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 22 அரைசதங்கள் அடங்கும். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய 11 போட்டிகளில் மட்டும் 380 ரன்களைச் சேர்த்து, அந்த அணிக்கு எதிராகத் தனது 4வது அரைசதத்தைப் பதிவு செய்துள்ளார். மும்பைக்கு எதிராக 47.5 என்ற சராசரியைக் கொண்டுள்ள ருதுராஜ், ஒரு சிறந்த கேப்டனாகவும் பேட்டராகவும் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளார்.
கார்த்திக் சர்மா
இளம் வீரர் கார்த்திக் சர்மாவின் சாதனைப் பதிவு
தனது அறிமுக ஐபிஎல் தொடரிலேயே விளையாடி வரும் இளம் வீரர் கார்த்திக் சர்மா, இந்தப் போட்டியில் தனது முதல் அரைசதத்தை விளாசினார். 40 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த இவர், 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். 20 வயது 6 நாட்களே ஆன நிலையில், சிஎஸ்கே அணிக்காக அரைசதம் அடித்த இரண்டாவது இளம் வீரர் என்ற பெருமையை கார்த்திக் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஆயுஷ் மத்ரே (17 வயது 291 நாட்கள்) இந்தச் சாதனையைப் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.