ஐபிஎல் : ஆரஞ்சு கேப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல்
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் வீரர்கள் இதுவரை மூன்று முறை ஆரஞ்சு கேப்பை பெற்றுள்ளனர். ஆரஞ்சு கேப் என்பது ஒவ்வொரு சீசனிலும் பேட்டிங்கில் அதிக ரன் குவிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் சிஎஸ்கே அணி வீரர்கள் மூன்று முறை ஆரஞ்சு கேப்பை பெற்றுள்ளனர். முதல் முறையாக 2009 சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய மேத்யூ ஹைடென் 52 என்ற சராசரியில், 144.81 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்சமாக 572 ரன்கள் எடுத்து கேப்பை பெற்றார். அடுத்தபடியாக 2013இல் மைக்கேல் ஹஸ்ஸி சென்னை அணிக்காக 52.35 என்ற சராசரியில் 129.5 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 733 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை பெற்றார்.
2008 முதல் 2022 வரை ஆரஞ்சு கேப்பை வென்ற வீரர்கள்
மேலே கூறிய இரண்டு வீரர்களும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர்கள் எனும் நிலையில், சிஎஸ்கே கோப்பை வென்ற 2021 சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் 45.35 என்ற சராசரியுடன் 136.26 ஸ்ட்ரைக் ரேட்டில் 635 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை பெற்றார். ஐபிஎல் தொடர்களில் டேவிட் வார்னர் அதிகபட்சமாக மூன்று ஆரஞ்சு கேப்களை வென்றுள்ளார். அடுத்தபடியாக கிறிஸ் கெயில் 2 முறை ஆரஞ்சு கேப்பை பெற்றுள்ளார். மேலும் ஜோஸ் பட்லர், கே.எல்.ராகுல், கேன் வில்லியம்சன், விராட் கோலி, ராபின் உத்தப்பா, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷான் மார்ஷ் தலா ஒரு முறை ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளனர்.