2026 FIFA உலகக்கோப்பையுடன் சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுகிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
செய்தி முன்னோட்டம்
போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு 2026 FIFA உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவரது சகோதரி காடியா அவிரோ தகவலை வெளியிட்டுள்ளார். வட அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பை தொடரே ரொனால்டோவின் 'லாஸ்ட் டான்ஸ்' எனப்படும் இறுதித் தொடராக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான நாக்-அவுட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஸ்போர்ட் டிவிக்கு அளித்த பேட்டியில் காடியா இந்த ரகசியத்தை உடைத்தார். நம்பகமான வட்டாரங்களில் இருந்து தமக்குக் கிடைத்த தகவலின்படி, ரொனால்டோவின் சர்வதேச கால்பந்து பயணம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும், ரசிகர்கள் இதனை இருக்கும் வரை கொண்டாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சாதனை
உலகக்கோப்பையில் புதிய வரலாற்று சாதனை
குரோஷியாவுக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுகல் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கியதன் மூலம், உலகக்கோப்பை நாக்-அவுட் வரலாற்றில் விளையாடிய மிக வயதான வெளிக்கள வீரர் என்ற புதிய உலகச் சாதனையை 41 வயது 149 நாட்களேயான ரொனால்டோ படைத்துள்ளார். இதற்கு முன்பு போஸ்னியா கேப்டன் எடின் டிஸெகோ வசம் இருந்த சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார். கால்பந்து வரலாற்றிலேயே ஆறு வெவ்வேறு உலகக்கோப்பை பதிப்புகளில் (2006 முதல் 2026 வரை) கோல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ரொனால்டோ, நடப்புத் தொடரிலும் போர்ச்சுகல் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.