சென்னையில் முதலாவது சோழா செஸ் ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் போட்டி: அக் 30-இல் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் சதுரங்கத் தலைநகராகத் திகழும் சென்னை மாநகரில், முதலாவது சோழா செஸ் ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் சதுரங்கப் போட்டி வரும் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சோழா அறக்கட்டளையின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த சர்வதேச FIDE அங்கீகாரம் பெற்ற போட்டி, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ஐடிசி வெல்கம் ஹோட்டலில் நடைபெறுகிறது. 12 நாடுகளைச் சேர்ந்த 80 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில், குறைந்தபட்சம் 2250 மற்றும் அதற்கு மேற்பட்ட எலோ புள்ளிகளைப் பெற்ற நட்சத்திர வீரர்கள் மட்டுமே களம் காண உள்ளனர்.
வெளி நாட்டு வீரர்கள்
32 கிராண்ட்மாஸ்டர்கள் மற்றும் 12 நாடுகளின் பிரதிநிதிகள்
இப்போட்டியில் இந்தியாவின் முன்னணி 20 கிராண்ட்மாஸ்டர்களுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த 12 கிராண்ட்மாஸ்டர்கள் என மொத்தம் 32 கிராண்ட்மாஸ்டர்கள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
களமிறங்கும் 80 வீரர்களில் 75 பேர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பட்டங்களை (FIDE Titles) வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டு பாணிகளையும் யுத்திகளையும் எதிர்கொள்ளும் விதமாக 12 நாடுகளைச் சேர்ந்த 20 முதல் 24 வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதன் சராசரி ரேட்டிங் சுமார் 2400 ஆக இருக்கும் என்பதால், இந்தியாவில் அண்மைக் காலத்தில் நடைபெறும் மிகக் கடுமையான மற்றும் தரம் வாய்ந்த ஓபன் செஸ் போட்டிகளில் ஒன்றாக இது அமையவுள்ளது.
வாய்ப்பு
சர்வதேச நார்ம்களை வெல்லும் வாய்ப்பு
சர்வதேச அளவில் கிராண்ட்மாஸ்டர் (GM), சர்வதேச மாஸ்டர் (IM), மகளிர் கிராண்ட்மாஸ்டர் (WGM) மற்றும் மகளிர் சர்வதேச மாஸ்டர் (WIM) போன்ற உச்சகட்ட பட்டங்களை எட்டுவதற்குத் தேவையான 'நார்ம்' (Norm) நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இந்தத் தொடர் இளம் இந்திய வீரர்களுக்கு அரிய களமாக அமையும்.
வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உயர்தர கிராண்ட்மாஸ்டர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதால், வீரர்கள் நார்ம்களை எட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய சிரமம் குறையும்.
இந்தியாவில் அடுத்த தலைமுறை சதுரங்க சாம்பியன்களை உருவாக்கும் இலக்கோடு இத்தொடரை முன்னெடுப்பதாக சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவீந்திர குமார் குண்டு தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 30 அன்று மதியம் 1 மணிக்கு இப்போட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.