"சேப்பாக்கத்தில் முதல்முறையாக" : நம்பிக்கையுடன் களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2019க்கு பிறகு முதல்முறையாக சேப்பாக்கத்தில் விளையாட உள்ள நிலையில், சென்னையில் விளையாடுவது உற்சாகமளிப்பதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணி நடப்பு சீசனில் தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் மோதி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி 92 ரன்கள் எடுத்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சொதப்பியது தான் தோல்விக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால், திங்கட்கிழமை (ஏப்ரல் 3) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ருதுராஜ் கெய்க்வாட்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ருதுராஜ் பேசியாவது பின்வருமாறு:- எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் முதல்முறையாக விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் பேட்டிங் வரிசை நீண்டதாக இருப்பதால், தொடக்கத்தில் எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக விளையாட முடிகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் அணி சிறப்பாக செயல்படும். சென்னையுடன் இந்த ஆண்டு மேலும் பல நல்ல நினைவுகளை ஏற்படுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே ஐபிஎல் 2023 இல் அனைத்து அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி முடித்துள்ள நிலையில், அதிக ரன்கள், அதிகபட்ச தனிநபர் இன்னிங்ஸ் ஸ்கோர், சிறந்த பேட்டிங் சராசரியை ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் உள்ளார்.