சாட்ஜிபிடி உட்பட 3 புதிய ஸ்பான்சர்கள்: பிசிசிஐ-க்கு ரூ.130 கோடியில் புதிய ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், 2026-2028 உள்நாட்டுப் போட்டிகளுக்கான இணை ஸ்பான்சர்களாக ChatGPT, SBI Life மற்றும் Campa ஆகிய 3 நிறுவனங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான இந்த ஒப்பந்தம் ₹130 கோடி மதிப்பிலானது; இது முந்தைய சீசன்களை விட 44% அதிகமாகும். வரும் அக்டோபர் 27-ல் தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகள் தொடர் முதல் இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வரை 2028 மார்ச் மாதம் வரை இந்த ஸ்பான்சர்ஷிப் நீடிக்கும். இதன்மூலம் இந்திய கிரிக்கெட்டின் வணிக மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.
ஒப்பந்தம்
புதிய ஸ்பான்சர்கள் மற்றும் ஒப்பந்த விவரங்கள்
பானங்கள் தயாரிப்பு, காப்பீடு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறைகளின் முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தங்கள் மூலம் தனது வர்த்தகக் கட்டமைப்பை பிசிசிஐ மேலும் விரிவாக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் சந்தை மதிப்பையும், வணிக வாய்ப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 27 அன்று தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து இந்த நிறுவனங்களின் இணை ஸ்பான்சர்ஷிப் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
அட்டவணை
உள்நாட்டுப் போட்டிகளின் அட்டவணை
வரவிருக்கும் உள்நாட்டு சீசன் அக்டோபர் 27 அன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளுடன் தொடங்குகிறது.
தொடர்ந்து டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிரான தொடரும், புத்தாண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இறுதியாக, 2027 ஜனவரி 21 முதல் மார்ச் 3 வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருடன் உள்நாட்டு சீசன் நிறைவடையும்.
அதேவேளையில், இந்த சீசனுக்கான முதன்மை தலைப்பு ஸ்பான்சரை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை; அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.