சச்சின், கங்குலி, டிராவிட் மீண்டும் பிசிசிஐ-க்குள் வர வேண்டும்: சுனில் கவாஸ்கர் யோசனை
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் நட்சத்திர வீரர்களின் பரந்த அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் அதிகார வரம்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதோடு மட்டும் இந்த ஆலோசனைக் குழுவின் பணியை மட்டுப்படுத்தாமல், உள்நாட்டு மற்றும் சர்வதேசப் போட்டி அட்டவணைகளை தீர்மானிப்பது உள்ளிட்ட அனைத்து முக்கிய விவகாரங்களிலும் இக்குழுவிற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மறுசீரமைப்பு
முன்னாள் ஜாம்பவான்களைக் கொண்ட புதிய குழு
தற்போது பிசிசிஐ அமைப்பில் தேர்வுக் குழுக்கள் மற்றும் சிஏசி குழு மட்டுமே எஞ்சியுள்ளதைச் சுட்டிக்காட்டிய கவாஸ்கர், இந்தியக் கிரிக்கெட்டின் நலன் கருதி ஆலோசனைக் குழுவை மறுசீரமைத்து விரிவுபடுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், வீரேந்தர் சேவாக் போன்ற மாபெரும் சாதனையாளர்களை இக்குழுவில் ஏன் இணைக்கக் கூடாது; அவர்களுடன் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரும் இடம்பெறலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.
எதிர்காலம்
இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலமும் பெண்கள் கிரிக்கெட்டும்
இத்தகைய மகத்தான ஜாம்பவான்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அவர்கள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ஆகியோருடன் ஆலோசனைகளை மேற்கொண்டால், அது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் கிரிக்கெட்டுக்கெனத் தனித்துவமான ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார்.
"இதை நினைத்துப் பார்க்கும்போதே மெய்சிலிர்க்கிறது; இது உண்மையிலேயே நடக்குமா அல்லது வெறும் கனவாகவே கலைந்துவிடுமா?" என்றும் அவர் தனது கட்டுரையில் நெகிழ்ச்சியுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.