சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை?
சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட எய்டன் மார்க்ரம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடக்கும் அந்த அணியின் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில், புவனேஷ்வர் குமார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வழிநடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக மார்க்ரம் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார். மேலும் ஏப்ரல் 3 ஆம் தேதி அவர் இந்தியாவுக்கு வருவார். இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்காவின் நேரடித் தகுதிக்கு இந்தத் தொடர் முக்கியமானது. அவர்கள் நெதர்லாந்திற்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார் 2013 இல் சன்ரைசர்ஸ் தொடங்கப்பட்டதில் இருந்து அந்த அணியில் விளையாடி வருகிறார். மேலும் கடந்த காலங்களிலும் அந்த அணியை வழிநடத்தியுள்ளார். 2019 இல் ஆறு ஆட்டங்களிலும், 2022 இல் ஒரு முறையும் அணியை வழிநடாத்தியுள்ள நிலையில், அவர் தலைமையேற்ற அந்த ஏழு போட்டிகளில் இரண்டில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது. மார்க்ரம் தவிர, மார்கோ ஜான்சன் மற்றும் ஹென்ரிச் கிளாசென் ஆகியோரும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாட மாட்டார்கள். இதற்கிடையே, மார்க்ரம் சமீபத்தில் எஸ்ஏ 20 லீக் அறிமுக தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் தலைமையேற்று பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.