பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட்: இந்திய பந்துவீச்சு அபாரம்; 104 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா
பெர்த்தில் நடைபெற்று வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு சுருண்டது. முன்னதாக, வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சொதப்பிய நிலையில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக ரிஷப் பண்ட் 37 ரன்களும், கே.எல்.ராகுல் 26 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா பந்துவீச்சில் அபாரம்
இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் எளிதாக வீழ்ந்த நிலையில், பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர். இதனால், முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களுடன் தத்தளித்த ஆஸ்திரேலியா, இன்று இரண்டாம் நாளில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். மேலும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், தனது முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசர வைத்தார். இதன் மூலம், முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் முன்னிலையுடன், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறது.