'அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா?', சர்ச்சையில் பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 100 நாட்களே இருக்கும் நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை வெளியிட்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ.
சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், அகமதாபாத் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களில் இருக்கும் மைதானங்களை இந்த உலகக்கோப்பை தொடருக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறது பிசிசிஐ.
ஆனால், மொகாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள முக்கிய மைதானங்களை பிசிசிஐ தேர்ந்தெடுக்கவில்லை என குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் மைதானங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.
1987-ல் இருந்தே உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி வரும் இந்தூர் மைதானத்திற்கு இந்த வருடம் ஒரு போட்டி கூட ஒதுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, மைதானங்களை தேர்ந்தெடுப்பதிலும் அரசியல் செய்கிறதா பிசிசிஐ என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.
கிரிக்கெட்
அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்:
அக்டோபர் 5-ம் தேதி நடைபெறவிருக்கும் தொடக்கப் போட்டி, நவம்பர் 15-ம் தேதி நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டி மற்றும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி என முக்கியமான போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலேயே திட்டமிடப்பட்டிருக்கின்றன.
இந்தியா உலகக்கோப்பையை வென்ற 2011-ம் அரையிறுதியை நடத்திய பஞ்சாப் மொகாலி மைதானம், இந்த உலகக்கோப்பைத் தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பயிற்சி போட்டியை நடத்தக் கூட மொகாலி மைதானத்தை பிசிசிஐ தேர்ந்தெடுக்கவில்லை.
"முக்கிய போட்டிகள் நரேந்திர மோடி மைதானம் நடைபெறவிருக்கும் நிலையில், பஞ்சாபில் உள்ள மைதானத்திற்கு ஒரு போட்டி கூட வழங்கப்படவில்லை. இது பிசிசிஐ-யின் செயல்பாடாக எனக்குத் தெரியவில்லை, அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகவே தெரிகிறது" என கருத்துத் தெரிவித்திருக்கிறார் பஞ்சாப் விளையாட்டுத்துறை அமைச்சர்.