'ண்ணோவ் நீ வாண்ணா' : டி20 அணியில் மீண்டும் விளையாட ரோஹித் ஷர்மாவை அழைக்கும் பிசிசிஐ
2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறிய பிறகு தயக்கம் இருந்தபோதிலும் டி20 வடிவத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ரோஹித் ஷர்மாவை சமாதானப்படுத்த பிசிசிஐ முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வியாழக்கிழமை (நவம்பர் 30) புதுதில்லியில் தென்னாப்பிரிக்கா தொடருக்கான மூன்று அணிகளையும் பிசிசிஐ அறிவிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்னர் ரோஹித் ஷர்மாவின் சம்மதத்தை பெற்று விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிசிசிஐயின் செயலாளரும், தேர்வுக் குழுவின் கன்வீனருமான ஜெய் ஷா, தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகர்கரை டெல்லியில் சந்திக்க உள்ளார். அத்துடன் அடுத்த பெரிய ஐசிசி நிகழ்வான டி20 உலகக்கோப்பைக்கான திட்டம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளது.
ரோஹித் ஷர்மாவை மீண்டும் டி20 அணியில் விளையாட வைக்க விரும்புவதன் பின்னணி
இந்திய டி20 அணியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகி இருக்கும் நிலையில், டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் உலகக் கோப்பையின் போது கணுக்கால் தசைநார் கிழிந்ததால் அவர் ஓய்வில் உள்ளார். அவர் ஐபிஎல் சமயத்தில்தான் அணிக்கு மீண்டும் திரும்புவார் என கூறப்படுவதால், அவரது தலைமையில் டி20 உலகக்கோப்பை அணியை கட்டமைப்பதில் பிசிசிஐக்கு சிரமம் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் முடிந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ரோஹித் பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டதால், 2024 டி20 உலகக்கோப்பை வரை அவரை அணியில் விளையாட வைக்க பிசிசிஐ விரும்புகிறது. எனினும், ரோஹித் மறுப்பு தெரிவித்துவிட்டால், சூர்யகுமார் யாதவ் டி20 கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிகிறது.