ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர் ஏலத்தில் பங்கேற்க ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்களுக்கு தடை
ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பிற்கான ஏலத்தில் ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்கள் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் 2024க்கு புதிய டைட்டில் ஸ்பான்சருக்கான ஏல அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில்ம் கிரிக்பஸ்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சரின் உரிமைகளை ஏலம் எடுக்க ஒரு நிறுவனம் தகுதியற்றதாகக் கருதும் நிபந்தனைகளில் ஒன்றாக ஃபேன்டஸி கேமிங்கில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடும் நிறுவனங்களும் அடங்கும். முன்னதாக, ஃபேன்டஸி கேமிங் நிறுவனமான டிரீம்11, ஐபிஎல் 2020ல் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. 222 கோடிக்கு அப்போது ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள்
ஏல செயல்முறையில் பங்கேற்க தடைசெய்யப்பட்ட பிற நிறுவனங்களில் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான நடவடிக்கைகள், கிரிப்டோகரன்சிகள், மது பொருட்கள் அல்லது புகையிலை தொடர்பான துறைகளில் உள்ள நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த துறைகளில் உள்ள நிறுவனங்கள் தனது இதர பிராண்டுகள் மூலம் ஏலத்தை சமர்ப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஸ்பான்சர்ஷிப் டெண்டரில் அதிக ஆர்வம் காட்டப்படவில்லை என்றாலும், டெண்டருக்கான விண்ணப்பத்தை வாங்குவதற்கான காலக்கெடு ஜனவரி 8 என்றும் ஜனவரி 13-14க்குள் ஏலச் செயல்முறை நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024க்கான வரவிருக்கும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் 2028 வரை நீட்டிக்கப்படும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.