2026 டி20 உலகக் கோப்பை வெற்றி: ஜஸ்பிரித் பும்ராவிற்கு சிறப்பு ஊதிய இழப்பீடு வழங்க பிசிசிஐ திட்டம்
செய்தி முன்னோட்டம்
2026 டி20 உலகக் கோப்பையை வென்று, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி மற்றும் தொடர்ச்சியாக இருமுறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தத் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஜஸ்பிரித் பும்ராவிற்கு, பிசிசிஐ (BCCI) சிறப்பு ஊதியச் சலுகையை அறிவிக்கவுள்ளது. உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் பும்ரா. இறுதிப்போட்டியில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி (4/15) இந்தியாவின் வெற்றிக்கு முதுகெலும்பாகத் திகழ்ந்தார். சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தாலும், பந்துவீச்சில் பும்ராவின் பங்களிப்பு அளப்பரியது.
ஊதியம்
'ஏ+' பிரிவு நீக்கமும் பும்ராவின் ஊதியமும்
பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்ட 2025-26ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலில், ஆண்டுக்கு ரூ. 7 கோடி ஊதியம் வழங்கப்படும் 'A+' பிரிவு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாலும், ரவீந்திர ஜடேஜா டி20-யிலிருந்து ஓய்வு பெற்றதாலும், மூன்று வகை போட்டிகளிலும் விளையாடும் ஒரே வீரராக பும்ரா மட்டுமே எஞ்சியிருந்தார். ஒருவருக்காக மட்டும் தனிப்பிரிவு தேவையில்லை என வாரியம் கருதியது. பும்ரா தற்போது ஜடேஜா மற்றும் சுப்மன் கில் ஆகியோருடன் 'A' பிரிவில்(ரூ. 5 கோடி) சேர்க்கப்பட்டுள்ளார். பும்ராவின் அபாரமான மற்றும் நிலையான ஆட்டத்தை கருத்தில் கொண்டு, அவருக்கு கிடைக்க வேண்டிய ரூ. 2 கோடி இழப்பை பிசிசிஐ ஈடுகட்ட முடிவு செய்துள்ளது.
தகவல்
பிசிசிஐ வட்டாரத் தகவல்
இதன் மூலம் அவர் இந்த ஆண்டும் ரூ. 7 கோடி ஊதியம் பெற்று, இந்தியாவின் அதிக ஊதியம் பெறும் கிரிக்கெட் வீரராக தொடர்வார். "பும்ராவின் ஊதியத்தை ரூ. 7 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாகக் குறைப்பது நியாயமற்றது. எனவே, அவரது திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒப்பந்த மதிப்பீட்டில் திருத்தம் செய்ய வாரியம் ஆலோசித்து வருகிறது," என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.