ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகள் பங்கேற்க பிசிசிஐ ஒப்புதல்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் பங்கேற்க ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய கிரிக்கெட் அணிகளை அனுப்பத் தயாராக இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதலில் பிசிசிஐ அணிகளை அனுப்ப மறுத்த நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில், போட்டியில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான முழு வலிமை கொண்ட இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும். அதேநேரத்தில் ஆடவர் பிரிவில் இரண்டாம் தர அணியை அனுப்ப உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையும் நடப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி
ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆடவர் இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 1998இல் இரண்டாம் தர அணியை அனுப்பி படுதோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் எப்போதும் பங்கேற்காத நிலையில், இந்த முறையும் இரண்டாம் தர அணியையே அனுப்ப உள்ளது. எனினும் தற்போது இரண்டாம் தர அணியின் வலிமையையும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு நிகராக உள்ளதால், நிச்சயம் தங்கம் வென்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான திட்டத்தில் ஷிகர் தவான் இல்லாததால், அவர் தலைமையில் ஐபிஎல் மற்றும் அயர்லாந்து தொடரில் விளையாடுபவர்களை கொண்டு வலுவான அணியாக அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, மகளிர் கிரிக்கெட் அணியும் இந்த முறைதான் முதன்முதலில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.