மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் முடிந்தது! ஐந்து அணிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் ஐபிஎல் அணிகளின் பட்டியலை பிசிசிஐ இன்று (ஜனவரி 25) வெளியிட்டுள்ளது. 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு மகளிர் ஐபிஎல்லை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், தொழில்நுட்ப ஏலம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், நேற்று தொழில்நுட்ப ஏலத்திலிருந்து நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டு, நிதி ஏலத்தை சமர்ப்பிக்க பிசிசிஐ உத்தரவிட்டது. அதன்படி நிதி ஏலத்தை நிறுவனங்கள் இன்று சமர்ப்பித்ததை அடுத்து, ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் ஐந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணிகளின் மொத்த ஏல மதிப்பீடு ரூ.4,669.99 கோடியாக உள்ளது.
பிசிசிஐ ட்வீட்
மகளிர் ஐபிஎல் ஏலத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்
அதானி குழுமம் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட உரிமையை ரூ. 1,289 கோடிக்கு வாங்கியுள்ளது. மும்பையை தளமாகக் கொண்ட அணியை மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்கள் ரூ. 912.99 கோடிக்கு வாங்கியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் உரிமையாளர்கள் பெங்களூருவை சேர்ந்த அணியை ரூ. 901 கோடிக்கு வாங்கியுள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸ் உரிமையாளர்கள் டெல்லியை சேர்ந்த அணியை ரூ. 810 கோடிக்கு வாங்கியுள்ளனர். காப்ரி குளோபல் லக்னோவை தளமாகக் கொண்ட அணியை ரூ. 757 கோடிக்கு வாங்கியுள்ளனர். இதற்கிடையே, ஆடவர் ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், சென்னையை தளமாகக் கொண்டு எந்த அணியும் உருவாக்கப்படாததற்கு சமூக ஊடக தளங்களில் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.