அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் அபார வெற்றி! தொடரையும் கைப்பற்றியது வங்கதேசம்
புதன்கிழமை (மார்ச் 29) சட்டோகிராமில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் 2 வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வங்காளதேசம் 2-0 என முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. முதல் இன்னிங்ஸின் இடையே மழை குறுக்கிட்டதால், போட்டி தலா 17 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்ட நிலையிலும், வங்காளதேசம் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 ரன்களை எடுத்தது. லிட்டன் தாஸ் அதிகபட்சமாக அரைசதம் கடந்து 83 ரன்கள் குவித்தார். பதிலுக்கு, அயர்லாந்து பேட்டிங் மிக மோசமாக இருந்ததால், 17 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
வங்கதேசம் vs அயர்லாந்து 2வது டி20 புள்ளிவிபரங்கள்
வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் ஐந்து விக்கெட்டுகளை (5/22) வீழ்த்தி வங்கதேசத்தின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் ஷாகிப் தற்போது டி20 போட்டிகளில் 451 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனை படைத்ததோடு, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 450 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கிடையே லிட்டன் தாஸ் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வங்கதேச வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இப்போது 1,600 ரன்களைத் தாண்டிய 4வது வங்கதேச வீரர் என்ற பெருமையையும் லிட்டன் தாஸ் பெற்றுள்ளார்.