LOADING...
முஸ்தபிசுர் ரஹ்மான் சர்ச்சை: பங்களாதேஷில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு காலவரையறையற்ற தடை விதிப்பு
பங்களாதேஷில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு காலவரையறையற்ற தடை

முஸ்தபிசுர் ரஹ்மான் சர்ச்சை: பங்களாதேஷில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு காலவரையறையற்ற தடை விதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jan 05, 2026
03:34 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷில் இந்திய பிரீமியர் லீக் 2026 (ஐபிஎல் 2026) போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியிலிருந்து பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சையே இந்த அதிரடி முடிவுக்குக் காரணமாகும். 2026 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தபிசுர் ரஹ்மானை ₹9.20 கோடிக்கு வாங்கியிருந்தது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கேகேஆர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. பங்களாதேஷில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அங்கு சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியான பின்னணியில், சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வினை

வங்கதேச அரசின் எதிர்வினை

பிசிசிஐயின் இந்த உத்தரவு வங்கதேச மக்களிடையே பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வங்கதேச தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: ரஹ்மானை நீக்கியதற்கு பிசிசிஐ முறையான அல்லது நியாயமான காரணத்தை வழங்கவில்லை. இது பங்களாதேஷ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம். பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகள் மற்றும் அது சார்ந்த விளம்பரங்களை ஒளிபரப்ப உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது. ஒரு ஒப்பந்த வீரருக்கே இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றால், பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியா செல்வது பாதுகாப்பானதல்ல என அந்நாட்டு அரசு கருதுகிறது.

தாக்கம்

உலகக் கோப்பை மீதான தாக்கம்

இந்த மோதல் வெறும் ஐபிஎல் போட்டியோடு நின்றுவிடவில்லை. பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம், இந்தியாவில் நடைபெறவுள்ள தனது டி20 உலகக்கோப்பை போட்டிகளை வேறு நாடுகளுக்கு (உதாரணமாக இலங்கை) மாற்றக் கோரி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கோரிக்கை வைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவிற்குத் தங்கள் அணியை அனுப்பப் போவதில்லை என்றும் வங்கதேச அரசு அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுகள் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன. 2026இல் இந்திய அணி பங்களாதேஷிற்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணமும் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வை எட்டுமா அல்லது இந்த விரிசல் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement