AUSvsPAK : ஆஸ்திரேலியா அபார வெற்றி; புள்ளிபட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேற்றம்
பெங்களூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் (163) மற்றும் மிட்செல் மார்ஷ் (121) ஆகிய இருவரும் சதமடித்த நிலையில், ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹாரிஸ் ரவூப் ரன்களை வாரி வழங்கினாலும், 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போராடி தோற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
368 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா சபீக் (64) மற்றும் இமாம்-உல்-ஹக் (70) இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். எனினும், கடினமான இலக்கு என்பதால் அதிக அழுத்தத்துடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றியுடன் ஆஸ்திரேலியா மீண்டும் புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைந்து நான்காவது இடத்தில் தற்போது உள்ளது.