AUSvsNZ : கடைசி பந்து வரை திக்திக்; போராடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில்சனிக்கிழமை (அக்டோபர் 28) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் 81 ரன்களும், டிராவிஸ் ஹெட் 109 ரன்களும் எடுத்தனர். இருவரும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்தாலும், அதன் பின்னர் வந்தவர்கள் அதை தொடராததால் ரன் வேகம் குறைந்து, 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட் மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
கடைசி வரை போராடிய நியூசிலாந்து கிரிக்கெட் அணி
389 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் டெவோன் கான்வே 28 ரன்களிலும், வில் யங் 32 ரன்களிலும் வெளியேறினர். எனினும், ராச்சின் ரவீந்திரா சதமடித்து 116 ரன்களும், டாரில் மிட்செல் 54 ரன்களும் எடுத்து அணியை மீட்டனர். தொடர்ந்து, ஜேம்ஸ் நீசம் கடைசி ஓவர் வரை போராடி அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினார். கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் அவர் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆக, நியூசிலாந்துக்கு ஒரு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், கடைசி பந்தில் ரன் ஏதும் அடிக்க முடியாமல் போனதால், ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.