பார்டர் கவாஸ்கர் டிராபி 2026/27: இந்தியா வருகிறது ஆஸ்திரேலிய அணி; அட்டவணை வெளியானது
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது 2026-27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணையை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த முறை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சோதனையாக அமையப்போகிறது.
சவால்
14 வாரங்களில் 10 டெஸ்ட்
டிசம்பர் முதல் மார்ச் வரையிலான வெறும் 14 வார கால இடைவெளியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே இது போன்ற ஒரு நெருக்கடியான அட்டவணை இதற்கு முன் இருந்ததில்லை எனக் கூறப்படுகிறது. பேட் கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் மற்றும் நாதன் லயன் போன்ற மூத்த வீரர்களுக்கு இது ஒரு முக்கியமான தொடர். ஏனெனில் இவர்கள் யாரும் இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றதில்லை. 2027 ஜனவரி மத்தியில் அல்லது இறுதியில் இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிச்சுமை
வீரர்களின் பணிச்சுமை
இந்தத் தொடர் முடிந்த கையோடு மார்ச் 11 அன்று இங்கிலாந்துக்கு எதிராக மெல்போர்னில் 150 வது ஆண்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா விளையாட வேண்டும். இந்த நெருக்கடியான அட்டவணையைக் கருத்தில் கொண்டு, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோருக்கு வரவிருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் இருந்து கட்டாய ஓய்வு எடுக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அட்டவணை
ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அட்டவணை
ஆகஸ்ட் - 2 டெஸ்ட் (வங்கதேசத்திற்கு எதிராக - உள்ளூர்) அக்டோபர் - 3 டெஸ்ட் (தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக - வெளியூர்) டிசம்பர் - ஜனவரி - 4 டெஸ்ட் (நியூசிலாந்திற்கு எதிராக - உள்ளூர்) ஜனவரி - மார்ச் - 5 டெஸ்ட் (இந்தியாவிற்கு எதிராக - வெளியூர்) மார்ச் 11-15 - 150வது ஆண்டு டெஸ்ட் (இங்கிலாந்திற்கு எதிராக - மெல்போர்ன்)