AUSvsAFG : மீண்டும் வெர்டிகோ நோயால் அவதிப்படும் ஸ்டீவ் ஸ்மித்; ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவு
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மோத உள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கு முன்னதாக பேசிய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், சமீபத்திய ஆண்டுகளில் தன்னை பலமுறை தொந்தரவு செய்த வெர்டிகோ நோயால் மீண்டும் அவதிப்படுவதாக கூறியுள்ளார். நவம்பர் 2020 இல் சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது வெர்டிகோ நோயால் மோசமாக பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு கூட, பாகிஸ்தான் டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, கேட்ச் பிடிக்க முயற்சித்த போது சரிந்த பிறகு அதே பிரச்சினையை எதிர்கொண்டார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம்
போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்டீவ் ஸ்மித், "கடந்த சில தினங்களாக எனக்கு கொஞ்சம் வெர்டிகோ பிரச்சினை இருந்தது. அதனால் கொஞ்சம் எரிச்சலாக இருந்தது. எனினும், இன்று பயிற்சியை முடித்து நன்றாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்." எனக் கூறினார். இதனால், ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, மிட்செல் மார்ஷ் மீண்டும் அணிக்கும் திரும்பியுள்ளதாகக் கூறிய ஸ்டீவ் ஸ்மித், மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறினார். அதே நேரத்தில், அவர்கள் இருவரும் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்து இப்போது கூறமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.