
மினிமேக்ஸ் கார்ட் பந்தயத்தில் சாம்பியன் பட்டம்; 10 வயது இந்திய கார் பந்தைய வீராங்கனை அத்திகா மிர் உலக சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவைச் சேர்ந்த 10 வயது இளம் கார் பந்தய வீராங்கனை அத்திகா மிர், யுஏஇ கார்ட் பந்தயத்தின் மினிமேக்ஸ் பிரிவில் கோப்பையை வென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்கள் உட்பட 14 போட்டியாளர்களுக்கு மத்தியில், துபாய் கார்ட்ரோமில் நடந்த டிஏஎம்சி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடத்திலிருந்து பந்தயத்தைத் தொடங்கி, உறுதியான வெற்றியை அவர் பெற்றார். இந்தப் போட்டியில், கோப்பையையும், முதல் இடத்தையும் பிடித்ததன் மூலம், மினிமேக்ஸ் பிரிவில் இந்தச் சாதனைகளைப் படைத்த முதல் பெண்மணி என்ற பெருமையை அத்திகா பெற்றுள்ளார். ஐரோப்பாவில் வெற்றிகரமான சீசனுக்குப் பிறகு, மத்திய கிழக்கில் தனது பந்தயப் பயணத்திற்கு இது ஒரு சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது.
ஃபார்முலா 1
ஃபார்முலா 1 அகாடமியில் சேர்ப்பு
இந்த ஆண்டு ஃபார்முலா 1 தனது எஃப்1 அகாடமி திட்டத்திற்காக, ஒரு இந்திய வீரரை முதல் முறையாகத் தேர்வு செய்தது. அந்த நபர் அத்திகா மிர். இது அவரது அரிய திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியது. "இந்த வெற்றியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் கார்ட்ரோமில் தான் எனது பந்தயப் பயணம் தொடங்கியது. இந்த இடம் எப்போதும் எனது இதயத்திற்கு நெருக்கமாகவே இருக்கும்." என்று அத்திகா மிர் கூறினார். அத்திகா ஒரு பந்தயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஆசிப் நசீர் மிர், முன்னாள் ஃபார்முலா ஆசியா துணை சாம்பியன். ஃபார்முலா 1 உலக சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனைப் பின்பற்றி, மோட்டார் விளையாட்டுகளின் உச்சத்தை எட்டுவதே தனது இறுதி இலக்கு என்று அத்திகா கூறியுள்ளார்.