LOADING...
"ஆண்கள் அணி செய்யாததை ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான பெண்கள் அணி செய்துவிட்டது" - ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு
வீராங்கனைகள் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்து அஸ்வின் ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார்

"ஆண்கள் அணி செய்யாததை ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான பெண்கள் அணி செய்துவிட்டது" - ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2025
10:42 am

செய்தி முன்னோட்டம்

இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் அவரது வீராங்கனைகள் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், இந்திய ஆண்கள் அணியை பாராட்டும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான அணி, இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு முன்னோடிகளாக திகழ்ந்த மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோரை மேடைக்கு அழைத்து, அவர்களுடன் சேர்ந்து கோப்பையை உயர்த்தி, மகிழ்ச்சியைக் கொண்டாடியது.

பாராட்டு

அஸ்வின் பாராட்டு

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "இந்திய ஆண்கள் அணி ஒருபோதும் இதுபோன்று செய்ததில்லை. அதற்காக நான் இந்திய மகளிர் அணிக்கு சல்யூட் செய்கிறேன்" என்று பாராட்டினார். ஜுலன் கோஸ்வாமி உட்பட அந்த ஜாம்பவான்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் துரத்திய உலகக் கோப்பையை, வெற்றியின் உச்சத்தில் இருந்த இளம் வீராங்கனைகள் மரியாதையாக அவர்களிடம் வழங்கியபோது, ஜுலன் ஆனந்தக் கண்ணீர் வடித்தது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருந்தது. ஆண்கள் அணி பொதுவாக ஊடகங்களில் தங்கள் முன்னோடிகளைப் பற்றிப் பேசினாலும், செயலில் உண்மையான அங்கீகாரம் கொடுப்பதில்லை என்றும், "பொதுவாக, 'என் தலைமுறை அணிதான் சிறந்தது' என்றும், 'உன் தலைமுறை அணி அவ்வளவு சிறப்பாக இல்லை' என்றும் விவாதிக்கப்படுகிறது" என்றும் அஸ்வின் வெளிப்படையாகக் கூறியது பேசுபொருளானது.

சாதனை

உலகக்கோப்பையை வென்று சாதனை புரிந்த மகளிர் அணி

கடந்த 2005 மற்றும் 2017 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, சுமார் இருபது ஆண்டுகால மன உளைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகளிர் அணி நீண்டகாலமாக எதிர்பார்த்த உலகக் கோப்பை வென்று பெருமையை கொண்டு வந்துள்ளது. உலகக் கோப்பைக்கு முன், கிரிக்கெட் வீராங்கனைகள் ஜுலன் கோஸ்வாமியிடம், "உங்களால் அடுத்த முறை இருக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் உங்களுக்காக நாங்கள் கோப்பையை வெல்வோம்" என்று அளித்த நள்ளிரவு வாக்குறுதியை நினைவுகூர்ந்தே தான் கண்ணீர்விட்டதாக ஜுலன் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.