இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ODI : வரலாற்று சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 116 ரன்களுக்கு இந்திய அணி சுருட்டியது. இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆவேஷ் கானுடன் இணைந்து தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் ஆர்டரை முழுமையாக சாய்த்தார். ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், அர்ஷ்தீப் இந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தனது முதல் ஐந்து விக்கெட்டை பதிவு செய்தார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளராகவும் ஆனார்.
தென்னாப்பிரிக்காவில் ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்தியர்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார். மேலும், தென்னாப்பிரிக்காவில் ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா 2003 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை செய்த முதல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஆனார். மேலும், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 2018இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.