ஐபிஎல் 2023 : அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பு கிடைக்குமா? ரோஹித் சர்மா சொன்னது இது தான்
ஐபிஎல் 2023 சீசன் தொடங்க உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அணியில் இடம் கிடைக்குமார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022 சீஸனின்போது மும்பை இந்தியன்ஸ் பரிதாப தோல்வியை சந்தித்து வந்த நிலையில், ஆல்ரவுண்டரான அர்ஜுனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல்கள் எழும்பி வந்தன. ஆனால் கடைசி வரை ஒரு போட்டியில் கூட அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கவில்லை. இந்நிலையில், அவரை இந்த முறையும் மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்துள்ள நிலையில், அவருக்கு பிளேயிங் 11'இல் வாய்ப்பளிக்கப்படுமா என ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டபோது, "நல்ல கேள்வி, வாய்ப்பிருக்கும் என்று நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கரை உற்று கவனித்து வரும் கோச் மார்க் பவுச்சர்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரும், அர்ஜுன் தனது பந்துவீச்சால் பலரைக் கவர்ந்துள்ளார் என்றும் சூழலுக்கு ஏற்ப அவர் நிச்சயமாக தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார் என்று தெரிவித்தார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு நடந்த ரஞ்சி டிராபியில் கோவா அணிக்காக விளையாடிய அர்ஜுன், தனது முதல் போட்டியிலேயே சதமடித்தார். சச்சினும் 34 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் ரஞ்சி போட்டியில் சதமடித்ததை அப்போது பலரும் நினைவுகூர்ந்து அர்ஜுனை பாராட்டினர். சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதாலேயே அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக, 2022 ஐபிஎல் சீசனிலிருந்து குரல்கள் ஒலித்து வரும் நிலையில், இந்த முறை அவருக்கு நிச்சயம் பிளேயிங் 11'இல் இடம் கிடைக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர்.