Loading...
இங்கிலாந்தை வீழ்த்திய பின் அர்ஜென்டினா செய்த காரியம்! ஃபிஃபா தடை விதிக்கும் அபாயம்; அப்படியென்ன நடந்தது?
இங்கிலாந்தை வீழ்த்திய பின் அர்ஜென்டினா செய்த காரியத்தால் ஃபிஃபா தடை விதிக்கும் அபாயம்

இங்கிலாந்தை வீழ்த்திய பின் அர்ஜென்டினா செய்த காரியம்! ஃபிஃபா தடை விதிக்கும் அபாயம்; அப்படியென்ன நடந்தது?

எழுதியவர் Sekar Chinnappan
Jul 16, 2026
10:48 am

செய்தி முன்னோட்டம்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரின் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் மைதானத்தில் கொண்டாட்டங்களின் போது கால்பந்து விதிகளுக்குப் புறம்பாக அரசியல் பதாகை ஒன்றை வெளிப்படுத்தியதால், தற்பொழுது அந்த அணிக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிஃபா) கடுமையான தடைகளை விதிக்கக்கூடும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரசியல் பதாகை

மைதானத்தில் அர்ஜென்டினா வீரர்கள் காட்டிய அரசியல் பதாகை

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், அர்ஜென்டினாவின் நடுகள வீரர் ஜியோவானி லோ செல்சோ மற்றும் டிஃபெண்டர் நிக்கோலஸ் ஓட்டமெண்டி ஆகியோர் மைதானத்தில் ஒரு பதாகையை விரித்துக் காட்டினர்.

அதில் "லாஸ் மால்வினாஸ் சன் அர்ஜென்டினாஸ்" என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்கு "மால்வினாஸ் தீவுகள் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானவை" என்று பொருளாகும்.

முதலில் ரசிகர்களால் கேலரியில் காட்டப்பட்ட இந்த பதாகையை, வீரர்கள் மைதானத்திற்குள் கொண்டு வந்து கொண்டாடியதுதான் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தீவுப் பிரச்சினை

இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா இடையிலான ஃபாக்லாந்து தீவுப் போர்

சர்வதேச அரங்கில் ஃபாக்லாந்து தீவுகள் என்று அழைக்கப்படும் இந்த பகுதியை, அர்ஜென்டினா மக்கள் மால்வினாஸ் என்று அழைக்கின்றனர்.

அர்ஜென்டினாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 480 கிமீ தொலைவில் உள்ள இந்த பிரிட்டிஷ் ஆதிக்கப் பகுதிக்கு இரு நாடுகளும் பல தசாப்தங்களாக உரிமை கோரி வருகின்றன.

கடந்த 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் ஜூன் 14 வரை இந்த தீவைக் கைப்பற்ற இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில், 3 பொதுமக்கள் உட்பட 255 பிரிட்டிஷ் வீரர்களும், 649 அர்ஜென்டினா வீரர்களும் உயிரிழந்தனர்.

இறுதியில் அர்ஜென்டினா சரணடைந்த வரலாற்றுப் பின்னணியே இந்த விளையாட்டு மோதலுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் காரணியாகும்.

ADVERTISEMENT

தடை விதிக்க வாய்ப்பு

அர்ஜென்டினா அணிக்கு ஃபிஃபா தடை விதிக்க என்ன காரணம்?

சர்வதேச கால்பந்து சட்டங்களை உருவாக்கும் ஐஎஃப்ஏபி மற்றும் ஃபிஃபா அமைப்புகள், கால்பந்து மைதானங்களுக்குள் அரசியல், மதம் அல்லது தனிப்பட்ட முழக்கங்கள், சின்னங்கள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதித்துள்ளன.

விளையாட்டு உபகரணங்களிலோ அல்லது வீரர்களின் ஆடைகளிலோ இத்தகைய அரசியல் செய்திகள் இடம் பெறக் கூடாது என்பது விதியாகும்.

இந்த விதிகளை மீறும் வீரர்களுக்கோ அல்லது சம்பந்தப்பட்ட நாட்டு கால்பந்து சங்கத்திற்கோ போட்டி அமைப்பாளர்கள் அல்லது ஃபிஃபா நிர்வாகம் கடுமையான அபராதம் மற்றும் தடைகளை விதிக்க இந்த சட்டப்பிரிவு வழிவகுக்கிறது.

ADVERTISEMENT

அர்ஜென்டினா

அர்ஜென்டினா அணியின் அபார ஆட்டமும் இறுதிப் போட்டியும்

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், தற்போதைய நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் பல போட்டிகளில் பின்னடைவை சந்தித்தாலும், இறுதி நொடிகளின் அதிரடியால் மீண்டெழுந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த அரையிறுதியிலும் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் அந்தோணி கார்டன் கோல் அடித்து இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தினார்.

ஆனால், ஆட்டத்தின் 85-வது நிமிடம் வரை 1-0 எனப் பின்தங்கியிருந்த அர்ஜென்டினாவுக்கு, என்சோ பெர்னாண்டஸ் ஒரு சமன் செய்யும் கோலை அடித்தார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த 7 நிமிடங்களில் லௌடாரோ மார்டினெஸ் ஒரு தீர்க்கமான கோலை அடித்து அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

விதிமீறல்

விதிமீறல் மீதான அடுத்தகட்ட நிர்வாக நடவடிக்கைகள்

அரசியல் ரீதியாக பதற்றம் நிறைந்த பதாகையை வெளிப்படுத்திய இந்த விவகாரத்தை ஃபிஃபா ஒழுங்குமுறை குழு தற்பொழுது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

ஏற்கனவே உலகக்கோப்பைக்கு முன்பாக ஈரானின் புரட்சிக்கு முந்தைய கொடிகளைக் காட்ட ஃபிஃபா தடை விதித்திருந்த முன்னுதாரணங்கள் உள்ள நிலையில், அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ளத் தயாராகி வரும் வேளையில் இந்த விசாரணை அரங்கேறி வருகிறது.

இந்த விவகாரத்தில் அர்ஜென்டினா வீரர்களின் செயல்பாடு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், இறுதிப் போட்டிக்கு முன்பாகவே அர்ஜென்டினா கால்பந்து நிர்வாகத்திற்குப் ஃபிஃபா பெரிய அளவிலான அபராதத்தையோ அல்லது நிருவாகக் கட்டுப்பாடுகளையோ விதிக்கும் என விளையாட்டுத் துறை சட்ட வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ADVERTISEMENT