சதமடித்த இந்தியா; 100-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்து அனுஜ் ஸ்ரீவாத்ரி சாதனை
செய்தி முன்னோட்டம்
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 7-வது ஆசியான் பிளஸ் தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க வீரர் அனுஜ் ஸ்ரீவாத்ரி இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இத்தொடரின் முதல் சுற்றில் தோல்வியைச் சந்தித்த போதிலும், அடுத்தடுத்த சுற்றுகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், மீதமிருந்த எட்டு ஆட்டங்களில் 6 வெற்றிகள் மற்றும் 2 டிராக்களுடன் மொத்தம் 7 புள்ளிகளைக் குவித்து முதலிடத்தைப் பிடித்தார்.
சாம்பியன் பட்டம்
ஆசியான் தொடரில் சாம்பியன் பட்டம்
பிலிப்பைன்ஸில் நவம்பர் 3 முதல் 8 வரை நடைபெற்ற இந்த சர்வதேசப் போட்டியில் ஒன்பது சுற்றுகளின் முடிவில் 7 புள்ளிகளுடன் அனுஜ் ஸ்ரீவாத்ரி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
வியட்நாமின் கிராண்ட்மாஸ்டர் நுயென் டுக் ஹோவா 6.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், பிலிப்பைன்ஸின் நூரி அலெகின் 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இந்தத் தொடரில் பெற்ற அபார வெற்றியின் மூலம் நேரடியாக கிராண்ட்மாஸ்டர் பட்டத்திற்குத் தகுதி பெற்று, சர்வதேச சதுரங்க அரங்கில் அவர் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார்.
கிராண்ட்மாஸ்டர்
இந்தியாவின் 100-வது கிராண்ட்மாஸ்டர்
கடந்த 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராக விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் பெற்று வரலாறு படைத்ததைத் தொடர்ந்து, தற்போது நாடு 100-வது கிராண்ட்மாஸ்டர் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளது.
மேலும் இதுவரை கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தைப் பெறாத மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற வரலாற்றுப் பெருமையையும் அனுஜ் ஸ்ரீவாத்ரி பெற்றுள்ளார்.
இவரது இந்த அசாத்திய சாதனை இந்திய சதுரங்க விளையாட்டு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.